Sunday, December 13, 2015

வைஷ்ணவ ஜனதோ - 1 (கோல் கொண்டுவா காக்கையே)



ஆழ்வாரின் வேலிக்கோல் என்னும் திருமொழி பாசுரங்கள் மிகவும் அற்புதமானவை. காக்கை குருவி எங்க ஜாதி என்பான் பாரதி. நம் வீட்டுக் குழந்தைகளை சமாதனப் படுத்த முற்படும் பொழுது "காக்கை தூக்கிக் கொண்டு போச்சு" என்பது மிக இயல்பான சொல்லடை. பெரியாழ்வாரும் தன் பாசுரங்களில் யசோதையாகவே தன்னை நினைத்து அந்த யசோதை காக்கையிடம் கண்ணன் மாடு மேய்க்கச் செல்ல தயாராகி இருப்பதாகவும் அதற்க்கு ஒரு கோல் கொண்டு வரும் படியும் தெரிவிக்கும் அற்புதமான பாசுரங்கள் "வேலிக்கோல் " என்பவை.

"வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி,
தாலிக் கொழுந்தை தடங்கழுத்தில் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்து பிறகிட்டு
காலிப்பின் போவாற்க்கோர் கோல் கொண்டுவா
கடல்நிற வண்ணர்க்கோர் கோல் கொண்டுவா!"



கண்ணன் என்றாலே நம் நினைவிற்கு வருவது தீராத விளையாட்டு தானே. ஈசன் வில்லை முறித்து முன்பு ராமாவதாரத்தில் சீதையை மணந்தவன் அவன். முற்பிறவியின் வாசனை என்பரே, அது போல சில தன்மையை இவனும் கொண்டிருக்கக் கூடுமோ? வேலி அமைப்பதற்கான கோலினை வெட்டி விளையாட்டாய் வில் செய்து நாணேற்றி வில்லோடு விளையாடுகிறான். தாலிக் கொழுந்தை தடங் கழுத்தில் பூண்டுக் கொள்கிறான் - ஆமைத்தாலி என்பர் இதனை ஒரு சில உரையாசிரியர். பல்வேறு அணிகலன்களை அணிந்தவன்  இந்த ஆமைத்தாலி என்ற தாவிரத்தின் கொழுந்தையும் எடுத்து தன் இளங்கழுத்தில் அணிந்து கொள்கிறான். பீலித் தழை என்னும் மயிற் பீலியை தன் பின்னால் வைத்துக் கொண்டு காலிப்பின் போவான் - பசுக் கூட்டத்தின் பின்னால் செல்லும் இவனுக்கு கன்றுகள் மேய்க்கும் பொருட்டு ஒரு கோலினை கொண்டுவா என்கிறாள் அன்னை. விண்ணுமாய் விரிந்தவன், கடலுமாய் பரந்து கிடப்பவன், கடல் நிறம் கொண்ட அந்த குழந்தை ஏனைய யாதவ குலத்து பிள்ளைகளோடு சேர்ந்து கன்றுகள் மேய்க்கச் செல்ல வேண்டும் , அவன் தயாராகிக் கொண்டிருக்கிறான் (பின்பு பூச்சூடிக் கொள்ள வேண்டும்) விரைந்து அவனுக்கு ஒரு கோலினை கொண்டு வா காக்கையே என பாடுகிறார் ஆழ்வார்.